தமிழனா? இந்தியனா? மனிதனா?

முதலில் மனிதன், இந்தியன் பிறகு தமிழன்

தமிழன் என்ற அடையாளம் தவறாக சித்தரிக்க படுவதே இன்றைய பல குழப்பங்களுக்கு காரணம்.

நாடு இரண்டு பட்டு கிடக்கிறது. ஆதரவ இலங்கை தமிழர்களுக்கா அல்லது விடுதலை புலிகளுக்கா என்பது தான் இங்கு இப்போது தலையாய பிரச்சினையே. விடுதலை புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் என்பது எல்லோரும் அறிந்தது தான். இருந்தாலும் அவர்கள் பால் அளவில்லா அன்பு கொண்டோர் நம் நாட்டு அரசியல்வாதிகள். சினிமா துறையில் ஆரம்பித்து வணிகர் சங்கம் முதல் ஆதரவு கரம் நீண்டு கொண்டே போகிறது.


நல்ல விஷயம் தான். ஆனால் ஆதரவு யாருக்கு? பல காலம் முன் இலங்கையில் கால் பதித்து இன்றும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களுக்கா அல்லது அவர்கள் பெயரை சொல்லி கொண்டு பல மனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கும் விடுதலை புலிகளுக்கா என்பது தான்.

பிராபகரன் : நல்லவரா? கெட்டவரா?

இது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கே தோன்றுகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் எழும் கடினமான கேள்வி. நான் கூட "ஆள் என்னவோ பார்ப்பதற்கு ஜம்மென்று இருக்கிறார். நல்லவராக தான் இருக்க வேண்டும்." என்று தான் நினைத்தேன். பிறகு தான் விடுதலை புலிகளின் பல திரை மறைவு நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வர உண்மை புரிய ஆரம்பித்தது. சிறுவர்களை போரிட தயார் செய்வது எந்த நாட்டில் ஐயா மனிதாபிமானத்தின் அடையாளம்? பெண்கள், குழந்தைகள் என்று யாரையும் விட்டு வைக்க வில்லை இவர்கள். பள்ளி செல்லும் வயதில் இருந்த பச்சிளம் பாலகர்களை துப்பாக்கி தூக்க வைத்த தன்னலம் மிக்க கூட்டம் தானே இது.

மனித வெடிகுண்டு கலாச்சாரத்தை துவக்கி வைத்த பெருமை யாருக்கு? ராஜீவ் காந்தி கொடூரமான முறையில் கொல்லப்பட்டது பலருக்கு ஏன் மறந்து போனது? காங்கிரசஸ் கட்சி என்பது அடுத்தது. ராஜீவ் காந்தி என்ற உன்னதமான மனிதனை கொல்ல எவ்வாறு மனம் வந்திருக்கும்? இன்றும் தொடரும் கொடுமைகள் எத்தனையோ. ஆனால், வாங்கி தர முடிந்ததா சுதந்திரம் இவர்களால்? அஹிம்சை வழி சென்றிருந்தால் இந்நேரம் தமிழனின் சுதந்திரக்கொடி பட்டொளி வீசி பறந்திருக்குமே! எத்தனை எத்தனை உயிர்கள் பலி? அத்தனை தியாகங்களும் விரயமாக அல்லவா போய் விட்டது? விலை மதிக்க முடியாத தமிழ் உயிர்களை காலனிடமிரிந்து மீட்டு தர முடியுமா? இதற்கெல்லாம் பிராபகரன் பதில் சொல்லுவாரா?

தமிழர்களே! விழித்தெழுங்கள்!

நம் இரத்தம் தான் இலங்கை தமிழர்கள் என்பது யாவரும் அறிந்தது தான். தமிழன் என்றுமே வன்முறைக்கு துணை போனவன் அல்ல. இனியும் அது நடக்காது. உங்கள் அமைதியான ஆதரவை அப்பாவி இலங்கை தமிழர்களுக்கு அர்ப்பணியுங்கள். இன்று இங்கு உங்கள் வீட்டில் பற்ற வைக்கப்படும் ஒரு சிறு விளக்கின் ஒளியானது இருண்டு கிடக்கும் நம் சகோதரர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும்.

அரசியல் காரணங்களுக்காக தமிழ் போராளிகள் என்ற போர்வையில் திரியும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள். தமிழ் நாட்டு இளைஞர்களையே ஒரு காலத்தில் இலங்கைக்கு கடத்தி சென்று போரில் ஈடுபடுத்த நினைத்த விடுதலை புலிகளையா ஆதரிக்கிறோம் என்று.தமிழர் விடுதலை நிச்சயம் ஏற்படும்.

இரத்தத்தால் அல்ல.

பல கோடி தமிழ் சகோதரர்களின் அன்பின் வெளிப்பாட்டினால் மட்டுமே.1 கருத்துக்கள்:

gopal November 30, 2008 at 2:35 PM

யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல, தங்களுக்கு ஆதரவு காட்ட வல்ல இந்திய மக்களின் தலைவரை மனித வெடிகுண்டு கொண்டு கொன்ற பின்னர், ஈழ விடுதலைக்கு இந்திய அரசும் மக்களும் ஆதரவு தரவில்லை என்று புலம்புவதால் பயனில்லை. இவ்வுண்மையை இன்று விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் தமிழர்கள் என்று புரிந்துகொள்வார்களோ அன்றுதான் ஈழத் தமிழர்களது உண்மையான விடுதலைக்கு வழி பிறக்கும்.

ஆகிரா
மழலைகள்.காம்