கல்லூரிகளின் காட்டுமிராண்டி கலாச்சாரம்

கல்லூரி மாணவர்களா? காட்டுமிராண்டிகளா?
அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த கொலை வெறி தாக்குதல் இன்றைய கல்லூரி மாணவர்களின் கட்டுப்பாடு, கலாச்சாரம், கண்ணியம் ஆகியவற்றை கேள்விக்குறி ஆக்கிவிட்டது. சட்டம் பயிலும் மாணவர்களே இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்தால், இவர்கள் படித்து முடித்த பின் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்வார்கள்? வெட்கக்கேடு. ஜாதி வெறி பிடித்து அலையும் இம்மாணவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்? இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையானது இனி வரும் மாணவர் சமுதாயத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

பள்ளியும் கல்லூரியும் பாடம் பயிலத்தானே ஒழிய பகையை வளர்க்க அல்ல என்பதை அந்த தீர்ப்பு ஆணி அடித்தார்ப்போல் பகரவேண்டும். இவை யாவுக்கும் காரணம் ஜாதி அரசியலே. மாணவர்கள் தங்கள் படிப்பு முடியும் வரை அரசியலில் ஈடுபடாமல் இருக்க சட்டம் ஏதும் கொண்டு வந்தால் அது வயிற்றையும் வாயையும் கட்டி பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோருக்கு நற்செய்தியாய் அமையும்.

நன்முறையை வளர்ப்பது பெற்றோர்களின் தலையாய கடமை என்பது இதிலிருந்து தெள்ள தெளிவாய் தெரிய வருகிறது. ஆசிரியர்களின் பங்கு வன்முறையை கிள்ளி எறிவதில் பன்மடங்காக தற்காலத்தில் உயர்ந்து உள்ளது. உணர்வார்களா ஆசிரியர்கள்?

காவல்துறையா? கண் தெரியா கபோதிக்கூட்டமா ?
சட்ட தேவதைக்கு தான் கண்ணில் கருப்பு துணி கட்டப்பட்டு இருக்கும். அதுவும் பாகுபாடின்றி நீதி வழங்குவதற்காக. ஆனால் இன்று அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த மோதலை வேடிக்கை பார்த்த காவல்துறை கூட்டத்தை பார்த்த பொது அவர்கள் பார்வை குறை உள்ளவர்களோ என்ற சந்தேகமே மேலோங்கி உள்ளது. இம்மாதிரியான அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தற்காலிக நீக்கம் செய்தும் தண்டனை வழங்கிய நீதி துறையை பார்க்கும் போது சட்டம் என்பதே கேலிக்கூத்தாக தான் தோன்றுகிறது. பொது மக்களோடு சேர்ந்து ஏதோ திரைப்படங்களில் வரும் சண்டை காட்சியை பார்ப்பது போல் பார்த்த இவர்களுக்கு வெறும் இட மாற்றமா?

தூங்கிக்கொண்டிருக்கும் நீதி தேவதையை யார் தட்டி எழுப்ப போகிறோம்? புதுப்புரட்சி செய்வதாக சொல்லும் ஏதாவது புது அரசியல்வாதியையே அனைவரும் நம்பும் நிலை உள்ளது. வருவானா ஒரு 'கல்கி' இவர்கள் கொட்டத்தை அடக்கி தர்மத்தை நிலை நாட்ட?

0 கருத்துக்கள்: